Wednesday, 21 November 2018

கஜாவின் துயர் துடைப்போம்...! 
கரம் கொடுப்போம்...!

Image result for கஜாவின் துயர் துடைப்போம்

அருமைத் தோழர்களே., தோழியர்களே வணக்கம்.

தமிழகத்திற்கே சோறிடும் சோற்று பூமியாம் காவிரிப் படுகை மாவட்டங்கள் (தஞ்சை., திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள்) இன்று கஜா புயல் அடித்து ஓய்ந்த பின்னும்., புயலின் பாதிப்பில் இருந்து மீளாதிருக்கின்றனர். இந்த நிலையிலும்., தஞ்சை., திருவாரூர் விவசாயிகளின் கவலை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

நம் வள்ளுவர் வாழ்த்திய விவசாயிகள் அல்லவா., என் பசிக்கு இன்று யார் உணவு தருவார் என்பது அவர்கள் கவலை இல்லையாம்., நாளை தமிழகம் அரிசி இன்றி பசியால் வாடுமோ., புயலால் இந்த போகம் போனதே., போன மின்சாரம் இன்னும் வரவில்லையே., எப்படி நாற்று நடுவேன்., வானம் பார்த்து ஓங்கிய தென்னை போர்க்களத்து வீரர்களாய் முறிந்து போனதுவே., மகிழ்வைக் கூட்டும் குடந்தை-ன் வெற்றிலைக் கொடிக்கால்கள் நாசமானதுவே என அழுவது அல்ல., எழுவது என்று அவர்கள் மனதளவில் தங்களை தேற்றிக் கொண்டு விட்டார்கள். புயல் காணாத இடங்களைத்தேடி., தேடி., இந்த கஜா புயல் கோரதாண்டவம் ஆடி உள்ளது.

நாம் என்ன செய்யப் போகின்றோம்...?

கொங்கு மாநகர் கோவையில்., 2018 நவம்பர் 19 அன்று நடைபெற்ற., நமது தமிழ் மாநிலச் செயற்குழுவில்., இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டு., உங்களின் உதவும் கரங்களை நம்பி., பிறர் துயர் காணச் சகியாத நெஞ்சின் ஈரம் எண்ணி., நமது தமிழ் மாநிலச் சங்கம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப் படுகை விவசாய பெருமக்களுக்கு., நிவாரண நிதி உதவி வழங்கிட அறைகூவல் விடுத்துள்ளது.

உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதே மனிதம் - என., இந்த மனிதநேயப் பணியில்., நம் குடந்தை தோழர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். நாமும்., நமது பங்கை செலுத்த வேண்டும். குடந்தை தோழர்களுக்கு தோள் கொடுத்திட வேண்டும்.

எனவே., தோழர்கள் தங்கள் பங்கை பணமாக., உடையாக., உணவு தானியமாக., தேவை நிரப்பும் பொருளாக தந்து., கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.

நமது கிளைச் செயலர்கள்., மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்களுக்கு., ஓர் அன்பு வேண்டுகோள்., நாளை 22-11-2018 அன்று ஒரு நாள் நமது அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு., நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் மட்டும் முழுமையாக ஈடுபடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். அதே போல்., வசூலிக்கப்பட்ட நிவாரண நிதியை 22-11-2018 அன்று மாலை 06-00 மணிக்குள் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


எனவே தோழர்களே...! புயலெனப் புறப்படுங்கள் நிதிகளை திரட்டிட., மழையெனப் பொழியுங்கள் நன்கொடைகளை அளித்திட., எவ்வளவு நிதியை வழங்கினாலும் நமது உள்ளம் நிறையாது. ஏன் எனில்., கைமடங்கா விவசாயிகள் கை ஒடிந்து உள்ளார்கள். நமது நெஞ்சம் சற்றே அமைதி அடைய., அள்ளித் தாருங்கள்.,

என...! தோழமையோடு...! வேண்டும்...!
ச.பாலகுமார்., மாவட்டச் செயலர்.,
சேலம் மாவட்டம் - SSA.

No comments:

Post a Comment