Tuesday, 4 December 2018

வீறுடன் காத்திருப்போம்., களமிறங்க...!
இறுதி வெற்றி நமதே......!


அருமைத் தோழர்களே., தோழியர்களே., வீர ஆவேசமுடன் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ள காத்திருந்தவர்களுக்கு., போராட்டம் தேதி குறிப்பிடாமல்., அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பால் ஒத்திப் போடப்பட்டது., மிகுந்த கோபத்தையே ஏற்படுத்தும்.

இந்த கோபம் நியாயமானது தான்., அதே சமயம்., சந்திக்கவோ...? பேசவோ...? முடியாதென்ற நிலையை மாற்றி., DOT அதிகாரிகள் மட்டுமின்றி., அமைச்சரையும் நம்மோடு பேச வைத்தது., அனைத்து சங்க ஒற்றுமை தான். 

நாம் விரும்பும் முடிவு ஏற்படவில்லை என்பது உண்மை தான்., அதே சமயம்., மோசமான நிர்வாகத்தையும்., நம் பக்கமே திரும்பாதிருந்த அமைச்சரையும் சற்று திரும்ப வைத்திருக்கிறோம் எனில் அதற்கு காரணம் நமது ஒற்றுமையே.

அப்படியானால்., அந்த ஒற்றுமையை கட்டிக்காப்பதன் மூலமே அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி செல்ல முடியும். வேகமான ஒரு பகுதியினரின் முடிவு., எந்த ஒரு விடிவையோ...? முடிவையோ...? ஏற்படுத்தாது. மாறாக., கோரிக்கையை வென்றடைவதற்கு அவசியத் தேவையான ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தும்., அதே போல்., ஊழியர்கள் மத்தியிலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்., கட்டியிருக்கின்ற ஒற்றுமையை., மேலும் பலப்படுத்தி உருக்கு போன்று காப்பதன் மூலமே ஒரு சேர சீறிப்பாய முடியும்.

ஒரு சிலரின் வேகமான பாய்ச்சலை விட., ஒன்றாய் ஒரு சேர நாம் வைக்கும் ஓரடி நகர்வுக்கு சக்தி அதிகம். அதுதான்., அரசை சிந்திக்க வைக்கும்., மாறாக., முடிவுகளில் மாறுபட்டோமானால் அது நாம் சந்திக்க வேண்டிய எதிர் தரப்புக்கே சாதகமாக முடியும்.

நமது கோபக்கனல் நீறு பூத்த நெருப்பாக இருக்கட்டும்., ஒற்றுமை உடையாது காப்போம்., நிர்வாகத்தின்., அரசாங்கத்தின் ஆணவம் உடைப்போம். சற்று., பொறுப்பதாலும்., தாமதிப்பதாலும் தோற்று விட்டோம் என்பதல்ல.

மாறாக., இன்னும் வேகமாக., ஆக்ரோஷமாக., பேருருவாய் எழப்போகிறோம் என்பதில் திண்ணமாக இருப்போம். ஊர்கூடித் தோற்றதில்லை., போராடாமல் நாம் வென்றதில்லை., நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். எதற்காக., எல்லோரும் ஒரு சேர சீறிப்பாய்வதற்கே., நமது கோபத்திற்கும் எரிமலையாய் வெடிக்கும் போர்க்குணத்திற்கும் தள்ளிப் போகும் நாட்கள் ஒரு போதும் தடையாக இருக்காது., நமது பொறுமை ஓய்வதற்கல்ல.

அக்கினிக்குஞ்சுகளாய் ஆர்த்தெழுந்து முன்னிலும் வேகமாக மோதுவதற்கே., போர்ப் படையென சீற்றமுடன் இருப்போம். எத்துணை தடைவரினும் அவை நொறுக்கி வெற்றி காண்போம். நமது வெற்றி வெகு தொலைவில் இல்லை. நமது ஒன்றுபட்ட ஆவேசம்., ஆட்சியாளரை நிச்சயம் நம் பக்கம் திருப்பும் சிறிதே காத்திருப்போம்., சீறிப்பாயும் தயார் நிலையோடு இருப்போம்., தொய்வு கொண்டு துவண்டு விடும் கூட்டமல்ல நாம். வெற்றி பெறாமல் ஓய மாட்டோம் என கோபத்தின் ரூபமாக கோடிக்கால் பூதமாக கூடித் திரெண்டெழுவோம்.

ஒன்றுபட்ட ஆவேசம் அதுவே நமது மூலதனம்...!
வெற்றி விலகிப் போக ஒரு போதும் விட மாட்டோம்...!
வீறுடன் காத்திருப்போம்...! களமிறங்க...!
இறுதி வெற்றி நமதே......!

-நன்றி.,
தோழர். ஆர்.கே.,
NFTE., தமிழ்நாடு புலனம்குழு (Whats App).,
பதிவிலிருந்து.

Monday, 3 December 2018

காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஒத்திவைப்பு
உறையிலிடப்பட்ட போர்வாள்...!


02-12-2018 அன்று., நமது CMD மற்றும் தொலைத்தொடர்பு செயலர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து., மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்த காரணத்தினால்., 03-12-2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தை., 02-12-2018 அன்று நடைபெற்ற AUAB கூட்டமைப்பின் கூட்டம் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்து., 10-12-2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்து இருந்தது. 

இந்த நிலையில்., 03-12-2018 அன்று மதியம் 12-30 மணிக்கு., நமது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் உடன்., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB கூட்டமைப்பு) பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில்., நமது கோரிக்கைகளில் கீழ்க்கண்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை விபரம்:
  • 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு: BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் பெறப்படும். இதற்கான பணியை செய்து முடிக்க DOT-யின் மூத்த அதிகாரி ஒருவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
  • ஓய்வூதிய மாற்றம்: BSNL ஓய்வூதியதாரர்களுக்கு., ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும். ஊதிய மாற்றத்திற்கும்., ஓய்வூதிய மாற்றத்திற்கும்., இனி யாதொரு சம்பந்தமும் இல்லை., ஓய்வூதிய மாற்றம் ஊதிய மாற்றத்தோடு இனி இணைக்கப்படாது.
  • ஓய்வூதியப் பங்களிப்பு: வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப் பங்களிப்பு என்ற மத்திய அரசு உத்திரவு., BSNL-லிலும் இனி அமுல்படுத்தப்படும்.
  • BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியப் பங்களிப்பு: BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு மார்ச் 2019 முதல் கூடுதலாக 3% சத ஓய்வூதியப் பங்களிப்பு செய்யப்படும். நாளடைவில் மீதமுள்ள 4% சத பங்களிப்பும் வழங்கப்படும்.
  • புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்: BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணியை செய்து முடிக்க DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.
  • 3-வது ஊதிய மாற்றம்: BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான 3-வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி., BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து உருவாவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே., ஊதிய மாற்றத்தில் நல்லதொரு முடிவினை எட்டிட., BSNL மற்றும் DOT-க்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இருப்பதால் டிசம்பர் 10 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை., மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைத்திட BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு 
முடிவு செய்துள்ளது.

தோழர்களே.,
நாடு முழுவதும்., நமது BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு., டிசம்பர் 10 முதல் நடைபெற இருந்த 
காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு., ஊழியர்களையும்., அதிகாரிகளையும் தயார் படுத்தியது. ஒருசில தோழர்களும்., ஓரிரு அமைப்புகளும் மட்டுமே போராட்டத்தில் இருந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டனர். மிகப் பெரும்பகுதி தோழர்கள் போராட்ட உணர்வோடு களம் காண கடமை உணர்வோடு காத்திருந்தனர். உரிமை., உணர்வு மிக்க தோழர்களுக்கு நமது நன்றி பாராட்டுக்கள்.

அனைத்துக் கருத்து வேற்றுமைகளையும் மறந்து., ஒன்றுபட்ட அமைப்பாக இன்றுவரை திகழ்ந்து., இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு., போராட்டம் இல்லாமலேயே., ஊதிய மாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி., அலைக்கற்றை ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து., இழுத்தடிக்கப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்பை முறைப்படுத்தி., நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பங்களிப்பைக் கூடுதலாக்கி., மிகப் பெரும் சாதனைகளை., கத்தியின்றி இரத்தமின்றி., போராட்ட அறைகூவல் மூலமே சாதித்த., நமது தலைவர்களுக்கும்., AUAB கூட்டமைப்புக்கும்., நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இனி., ஊதிய மாற்றம் என்ற., நமது ஒற்றைக் கோரிக்கை மட்டுமே., நம் முன்னே எதிர் நிற்கின்றது. அதையும்., நாம் வென்றாக வேண்டும். நமது உரிமைப் போருக்காக உருவப்பட்ட போராட்டம் என்ற போர்வாள் இன்று உறையிலிடப்பட்டுள்ளது. நமது உரிமைகள் மறுக்கப்படுமாயின் போராட்டம் என்ற போர்வாள் உயிர்த்தெழும்., உயர்ந்தெழும்., இதுவே நமது பாரம்பரிய அனுபவம்.

வெற்றுக் கூச்சலிலும்., வீண் பலிகளிலும் பலனில்லை., வினை வலி., தன் வலி., மாற்றான் வலி., அறிந்து செயல்படுவதே., வெற்றிக்கான வழி என்பது வள்ளுவன் வாக்கு., வள்ளுவன் வழியில்., தொடர்ந்து பயணிப்போம் தோழர்களே...!

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.