Tuesday 7 August 2018

 மறைந்தது சூரியன் - காலமானார் கலைஞர்



திருக்குவளைப் பூவாகப் பூத்தவர் - அவர்
திருவாரூர்த் தேர் போல மூத்தவர்...!
கருக்கொண்ட மேகம் போல் ஆர்த்தவர் - அவர்
கனல் கொண்டு தமிழ் எழுதிப் பார்த்தவர்...!

இளமையினைப் பலியாகக் கொடுத்தவர் - அவர்
இனவேங்கைப் புலியாகச் சிலிர்த்தவர்...!
களமாடிப் பார்க்கத்தான் முளைத்தவர் - அவர்
கற்பனையில் அற்புதங்கள் விளைத்தவர்...!

துயரத்தைப் பல காலம் சகித்தவர் - அவர்
தொண்டைத்தான் அமிழ்தென்றே சுவைத்தவர்...!
உயரத்தை உழைப்பாலே எடுத்தவர் - அவர்
ஒரு கண்ணைத் தமிழுக்காய்க் கொடுத்தவர்...!

தூக்கத்தை விழிப்புக்காய்த் துறந்தவர் - தன்
தோளிரண்டும் சிறகாக்கிப் பறந்தவர்...!
ஊக்கத்தின் பொருளாகிச் சிறந்தவர் - குறள்
ஓவியத்தைக் காவியமாய் வரைந்தவர்...!

பெரியாரின் ஏடுகளைச் சுமந்தவர் - அவர்
பேசி நின்ற சுவடுகளில் நடந்தவர்...!
எரிமலையின் சீற்றத்தை முகந்தவர் - அவர்
எதிர்ப்புகளுக் கிடையேதான் வளர்ந்தவர்...!

சூரியனில் சுடரெடுத்துச் சுழன்றவர் - அவர்
சுற்றிவரும் பூமியைப்போல் உழன்றவர்...!
ஆரியத்தின் ஆயுதங்கள் அளந்தவர் - அதை
அண்ணாவின் கவசத்தால் பிளந்தவர்...!

தடைகண்டு படைகண்டு சிரித்தவர் - தன்
தலைகொண்டு தொடர்வண்டி மறித்தவர்...!
நடைகொண்டு திரைவானில் ஜொலித்தவர் - தன்
நாவாலே வெற்றிகளைக் குவித்தவர்...!

சத்தியத்தை., சமத்துவத்தை விதைத்தவர் - அவர்
சாதிகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்...!
வித்தகமாய்ப் புத்தகங்கள் படைத்தவர் - நம்
விழியாக., மொழியாகக் கிடைத்தவர் ...!

வரலாறாய் வாழ்கின்ற வல்லவர் - அவர்
வாழ்புலமைத் திறத்தாலே வள்ளுவர்...!
உரைநடையில் புதுமரபு கண்டவர் - தமிழ்
உலகையே உறவாக்கிக் கொண்டவர்...!

ஐந்துமுறை அரசாண்ட மன்னவர் - தமிழ்
ஆட்சிக்கே இலக்கணங்கள் சொன்னவர்...!
இந்தியத்தாய் வியக்கவந்த தென்னவர் - அவர்
இனமானம் காப்பதிலே முன்னவர்...!

அரசியலின் விடிவெள்ளி ஆனவர் - நம்
ஆன்மாவில் தித்திக்கும் தேனவர்...!
நிறமாலை காட்டுதமிழ்ப் பாவலர் - நம்
நினைவுகளைக் கமழ்விக்கும் நாவலர்...!

வரலாற்று நூல்களில் - ஒருசில தாள்களில்...!
வாழ்கின்ற தலைவர்கள் உண்டு...!
வரலாறே தானாக...! வாழ்க்கையே நூலாக...!
வாழ்ந்தவர்  கலைஞர் அன்றோ...!

தன் வாழ்க்கை நூலின் கடைசிப் பக்கத்தில்க்கூட -ஓர்
வரலாற்றால் நிறைவு செய்து இருக்கின்றார் - ஆம்
வரலாற்றில் முதல் முறையாக - 07-08-2018 - இன்று
மாலை 6-10 மணிக்கு ஒரே நேரத்தில் - இரண்டு
சூரியன்கள் மறைந்து இருக்கின்றன...!

தமிழக அரசியலின் அடையாளமாக...! நின்ற...!
தமிழக...! முன்னாள் முதல்வர்...! முத்தமிழ் அறிஞர்...!
டாக்டர் கலைஞர். மு.கருணாநிதி அவர்களது...!
மறைவிற்கு......! NFTE., சேலம் மாவட்ட......!
சங்கத்தின்...! மனங்கசிந்த...!
அஞ்சலி...............!

No comments:

Post a Comment