Sunday, 25 November 2018

கஜா-வை மிஞ்சிய கருணை...!
அள்ளித்தந்த உள்ளங்களுக்கு நன்றி...! 


சேலம் மாவட்ட BSNL குடும்ப உறுப்பினர்கள்
என்பதற்குப் பெருமை கொள்வோம்...!

அன்புடையீர்., வணக்கம்.

நீறு பூத்த நெருப்பு., மேகம் மூடிய நிலவு., துடைக்கப்படாத வைரம்., தூசுபடிந்த கண்ணாடி., தூண்டப்படாத விளக்கு - இப்படி  இவை எல்லாமே., கூட்டுப் புழுவாய் சலனமற்று இருப்பவை தான். சந்தர்ப்பமும்., சூழ்நிலையும் வாய்க்கும் போது., தன் குணம் காட்டி., தங்கமாய் தகதகக்கும்., வண்ணச்சிறகசைத்து வான் பறக்கும்.

அது போல., நமது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த BSNL குடும்ப உறுப்பினர்கள்., ஒப்பந்த ஊழியர்கள் துவங்கி., அதிகாரிகள் வரை அத்தனை பேரும் அப்படித்தான்.

கோடிக்கால் பூதமட., என்று தோழர். ஜீவா தொழிலாளர்களை கோபத்தின் ரூபமடா என்பார். கோபத்தில் மட்டும் அல்ல., வாரி அணைப்பதில்., ஓடோடிச் சென்று உதவுவதிலும்., நமது தோழர்கள் கோடிக்கால் ரூபத்தின் வாரிசுகள் தாம்.

கொங்கு மாநகர் கோவையில் நடைபெற்ற., நமது மாநிலச் செயற்குழுவின் அறைகூவலை ஏற்று., தமிழகத்திற்குச் சோறிடும் அன்னையாம் காவிரிப் படுகை (டெல்டா) மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய துயரத்தை துடைக்க., நிவாரண நிதி திரட்டும் பணியில்., நமது சேலம் மாவட்டத்தின் பங்கைச் செலுத்த வேண்டுகோள் விடுத்தோம்.

தாங்கள் யார் என்பதை., நமது தோழர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்:

எந்த உதவி என்பதும் காலத்தே உடனே செய்வது என்ற வகையில்., நமது சேலம் மாவட்ட ஊழியர்களும்., அதிகாரிகளும் தாராளமாக முன்வந்து நிதி உதவி வழங்கி உள்ளனர்.

நமது சேலம் மாவட்ட பங்களிப்பாக ரூபாய். 40,000/- (ரூபாய். நாற்பது ஆயிரம்)-த்தை., குடந்தை நிவாரணக்குழுவிற்கு வழங்கி உள்ளோம்.

நமது வேண்டுகோளை ஏற்று., நிதி உதவி அளித்த அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., ஒப்பந்த ஊழியர்கள்., ஓய்வூதியர்கள்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் - விழியோரம் நீர் பெருக்கி., நமது நெஞ்சத்தின் ஈரத்தால் நன்றி சொல்வோம்.

உங்களை எண்ணித்தான்., ஒரு கவிஞன் இப்படிப் பாடினான் போலும்.,

இந்தப் பூமிப் பந்தின் - எந்த
ஒரு மூலையில் கண்ணீர் சிந்தினாலும்.,
அதைத் துடைக்க - எம்
சுட்டு விரல் நீளும்...! 

- நன்றி தோழமைகளே.,

குறிப்பு: சொர்க்கத்தின் கதவை கடவுள் திறந்தே தான் வைத்திருக்கிறான்., கடைசி மனிதன் வருவதற்காகவும் என்பார்கள். நிவாரணத்திற்கு கொடை அளிக்காத தோழர்கள்., உதவி செய்ய முடியாமல் போனதாக வருந்த வேண்டாம். இன்றைக்கு., இப்போது., தாருங்கள்., அடுத்த தவணையாக., அனுப்பி வைப்போம்.

தோழமை வாழ்த்துக்களுடன்.,
ச.பாலகுமார்., மாவட்டச் செயலர்.,
சேலம்., தொலைத்தொடர்பு.,
மாவட்டம் - SSA.

No comments:

Post a Comment