37-வது தேசியக்குழு கூட்ட முடிவுகள்

நமது 37-வது தேசியக்குழு கூட்டம் (NJCM) 20-11-2018 அன்று டெல்லி., கார்ப்பரேட் அலுவலகத்தில் திருமதி. சுஜாதா ராய்., இயக்குனர் (மனிதவளம் மற்றும் நிதி) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரு. A.M.குப்தா., பொது மேலாளர் (SR - ஊழியர் உறவு) அவர்கள் தேசியக்குழு (ஊழியர் தரப்பு மற்றும் நிர்வாகத் தரப்பு) உறுப்பினர்களை வரவேற்று தனது உரையில்., நமது BSNL நிறுவனம் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளதாகவும்., இக்குழு ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பேசிக் களைவதற்கான களம் என்றும்., நாம் 4-ஆம் தலைமுறை (4-G) தொழில் நுட்பத்தை பற்றி திட்டமிடுகையில்., தொழில் நுட்பம் 5-ஆம் தலைமுறைக்கு தாவ தயாராகி விட்டது என்றும்., நமது BSNL நிறுவனம் தடைகளை தாண்டி பயணிக்குமே தவிர., எந்த ஒரு சூழ்நிலையிலும் தயங்கி நிற்காது என்றார்.
தேசியக்குழுவின் தலைவர் திருமதி. சுஜாதா ராய் அவர்கள் தனது நீண்ட உணர்ச்சி பூர்வமான உரையில்., ஊழியர்களின் பிரச்சனைகள் முன்னிலைப் படுத்தப்பட்டு நிறுவனத்தின் அதிகாரமிக்க குழுவால் தீர்க்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். நமது BSNL நிறுவனம் எந்த ஒரு சந்தேகமின்றி கடினமான காலத்தில் பயணிப்பதாகவும்., ஊழியர் தரப்பு., நிர்வாகத்திற்கு புன்னகையுடன் இணைந்த சேவை (SWAS) மற்றும் உங்கள் வாசல் நோக்கி எங்கள் சேவை (BSNL at Your Door Step) போன்ற இயக்கங்களின் மூலம் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நிதி சுழற்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை ஊழியர்களின் நலனையும்., நிர்வாகத்தின் நலனையும் பாதித்துள்ளதாகவும்., இதனால்., நிதி தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வது கடினமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும்., ஊழியர்களின் பெரும் பங்களிப்பினால் சூழ்நிலை மேம்பட்டு வருவதாகவும் கூறினார். பல்வேறு அரசு திட்டங்களை நமது நிறுவனம் செயலாற்றி வருவதால் அடிப்படையான செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும்., கடினமான சூழ்நிலையில் நாம் ஒன்றுபட்டு வலிமையாக திகழ வேண்டும் என்றார். நமது நிறுவனம் முதன்மையான நிறுவனம் எனவும்., தேசிய பேரிடர் காலங்களில் நமது பங்களிப்பை., நமது இலாக்கா அமைச்சகம் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேசியக்குழுவின் ஊழியர் தரப்புத் தலைவர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் அனைவரையும் வரவேற்று தனது உரையில்., BSNL நிறுவனத்தின் வளர்ச்சி., மேன்மை மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து பேசியதற்காக., தேசியக்குழுவின் தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். இருதரப்பும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றுபட்டு நிற்பதாக குறிப்பிட்டார். மேலும்., பீகார்., உத்திரபிரதேசம்., மத்திய பிரதேசம்., அசாம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் TSM ஊழியர்களுக்கு ஜனாதிபதி உத்திரவு (Presidential Order) வெளியாவதில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளதைக் குறிப்பிட்டார். பீகார் மாநிலத்தில் மட்டும் 65 ஊழியர்களுக்கு ஜனாதிபதி உத்திரவு வழங்காததால் அந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். நிர்வாக போட்டித் தேர்வுக்கான கால அட்டவணையில் Telecom Technician (TT) தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும்., கேசுவல் ஊழியருக்கான ஊதியம் மாற்றம் செய்யப்படவில்லை என்பதையும்., முதுநிலை கணக்காயர்களை அதிகாரிகளாக தரம் உயர்த்தும் கோரிக்கை தற்போது வரை தீர்க்கப்படவில்லை என்பதையும்., ஊழியர்களின் உள்நோயாளி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் வழங்கப்படாமல் உள்ளதையும்., விதி 8 மற்றும் 9-இன் கீழான மாற்றலில் மாற்றல் மற்றும் விடுவிப்பதில் உள்ள சிக்கல்களையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
தேசியக்குழுவின் ஊழியர் தரப்புச் செயலர் தோழர். P.அபிமன்யூ தனது உரையில்., தேசியக்குழுவின் தலைவர் தனது தலைமை உரையில் குறிப்பிட்டது போல் ஊழியர்களின் பங்களிப்பு தொடரும் என மறுதலித்தார். மேலும்., அனைத்து இலாக்காப் போட்டித் தேர்வுகளையும் எழுத்து தேர்வாக நடத்துவது., கால காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்வது., ஓய்வூதியப் பலன்களை உயர்த்துவது., ஊதியக்குழு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வது ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். இதற்கு பதில் அளித்த., தேசியக்குழுவின் தலைவர்., கேசுவல் ஊழியர்களின் ஊதிய திருத்தம்., இணையத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஊழியர் தரப்பு கோரிக்கைகள் சாதகமாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
தேசியக்குழுவில் விவாதிக்கப்பட்ட ஆய்படு பொருள்கள்:
- 01-08-2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கேசுவல் ஊழியர்கள் நிரந்தரம்: 10 வருட சேவை முடித்த கேசுவல் ஊழியர்களை நிரந்தரப் படுத்துவதற்கு நீதிமன்ற தீர்ப்பின் மீது சட்டரீதியான கருத்து மற்றும் விளக்கம் (Legal Opinion) பெறப்படும்.
- 01-10-2000-க்கு பிறகு TSM-ஆக இருந்து TM-ஆக நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஜனாதிபதி உத்திரவு (Presidential Order) வெளியிடுதல்: இதற்கு தேவையான விளக்கங்கள் மற்றும் விபரங்கள் தொலைத்தொடர்பு துறை (DOT)-யிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
- 01-10-2000 அன்று அல்லது அதன்பின் நிரந்தரம் செய்யப்பட்ட TSM ஊழியர்களை DOT ஊழியர்களாக கருதி NEPP திட்டத்தின் கீழ் பதவி உயர்வு வழங்குதல்: இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது நிறுவனத்தின் CMD-யின் பரிசீலனைக்குப் பிறகு DOT-யின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
- இமாச்சலப் பிரதேச மாநில DOT Cell அதிகாரிகள் GPF பணப்பட்டுவாடா பணியை ஏற்க மறுக்கும் பிரச்சனை தொடர்பாக: இப் பிரச்சனை தொடர்பாக இயக்குநர் (நிதி) அவர்கள் தொலைத் தொடர்பு துறையின் உறுப்பினர் (நிதி) அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்.
- 10 + 2 கல்வித் தகுதி இல்லாமல் நேரடியாக பட்டப்படிப்பு முடித்தவர்கள்., 07-06-2015 அன்று நடைபெற்ற JE இலாக்கா போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பதவி உயர்வு பெற்றுள்ளனர். இப் பிரச்சனையின் மீது ஹைதராபாத் உயர் நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்து: இத் தீர்ப்பு அமுல்படுத்தப்படும்.
- BSNL ஊழியர்கள் சொத்து வாங்குவதற்கான அனுமதி பெறுவதற்கான தகுதி மதிப்பை உயர்த்திடுக: தொகையை உயர்த்துவதற்கு வழியில்லை. சட்ட வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.
- முதுநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (Sr. Hindi Translator) மற்றும் ராஜ் பாஷா அதிகாரிகளுக்கு ஆளெடுப்பு செய்திடுக: ஒரு மாத காலத்திற்குள் காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
- ஆந்திர மாநில ஊழியர்கள் ஹைதராபாத் மருத்துவமனைகளில் சிகிக்சை மேற்கொள்ள அனுமதிக் கடிதம் வழங்க ஆந்திர மாநில தலைமை பொது மேலாளர் (CGM) ஒப்புதல் இன்றி ஆந்திர மாநில பொது மேலாளர் (GM)-களுக்கு அதிகாரம் வழங்கிடு: இக் கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை., இருப்பினும்., மேற்குவங்கம்., கொல்கத்தா தொலைத்தொடர்பு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள வழிமுறைகள் பரிசீலிக்கப்படும்.
- குவஹாத்தி., இட்டாநகர் மற்றும் அஸ்ஸாமின் வடக்குப்பகுதி ஆகிய பகுதிகளுக்கிடையேயான இணைப்பை கண்ணாடி இழை கேபிள் (OFC) மூலம் NETF வழியாக மீட்டிடுக: தங்கு தடையற்ற சேவை தொடர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- TSM ஊழியர்களை BSNL ஊழியர்களாக இணைத்துக் கொள்வதற்கான ஜனாதிபதி உத்திரவு (Presidential Order) வழங்குவதில் ஏற்றுக் கொள்ள முடியாத காலதாமதம்: பீகார்., மத்தியப் பிரதேசம்., உத்திரப் பிரதேசம் (மேற்கு) மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநில நிர்வாகங்களிடமிருந்து இது குறித்து விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உத்திரப் பிரதேசம் (கிழக்கு) மாநில நிர்வாகம் இது வரை விபரங்களை அளிக்கவில்லை.
- BSNL ஊழியர்களுக்கும் (குரூப் C மற்றும் குரூப் D) கால காப்பீடு திட்டத்தை (Term Group Insurance) அமுல்படுத்து: இத் திட்டம் 2019 மார்ச்-க்கு முன்பாக அமுலாக்கம் குறித்து இறுதி செய்யப்படும்.
- BSNL தலைமையகம் சீராய்வு மனுக்களை தேவையற்ற வகையில் மேல்முறையீடு செய்வதை தவிர்த்திடுக: முதுநிலை கணக்காயர்களை அதிகாரிகளாக தகுதி உயர்த்தும் பிரச்சனை குறித்து., லக்னோ உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
- 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9000/- ஆக உயர்த்திடுக: இப் பிரச்சனை தொடர்பாக இயக்குநர் (மனிதவளம்) அவர்கள் தொலைத்தொடர்பு துறை உடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்.
- இணையம் மூலமான போட்டித் தேர்வில் (Online Exam) கலந்து கொள்ள ஊழியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கிடுக: கணினிப் பயிற்சி விரைவில் வழங்கப்படும்.
- கேசுவல் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம்: தேசியக்குழுவின் தலைவர்., 3-வது ஊதிய மாற்றத்தோடு இணைக்காமல்., தனியாக பரிசீலிக்க உத்திரவிட்டார்.
No comments:
Post a Comment