Tuesday, 18 September 2018

1968 செப்டம்பர் 19 - தியாகிகள் தினம்
பொன்விழா ஆண்டு - 2018


தபால் தந்தி (P&T)., இரயில்வே மற்றும் பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968 செப்டம்பர் 19 அன்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தம் தான் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அந்த தியாகிகளின் தியாகத்தை நினைவு கூற வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் 19 போராட்ட தியாகிகளின் பொன்விழா ஆண்டாகும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்:
  • குறைந்தபட்ச ஊதியம் அளித்திட வேண்டும்.
  • அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும்.
  • அகவிலைப்படியின் சூத்திரத்தை மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட இந்த கோரிக்கைகளை அறிவித்து., வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்பே தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கி விட்டது. டெல்லியில் உள்ள அனைத்து தபால் தந்தி (P&T)-ன் நிர்வாக பகுதிகளில் 18-ஆம் தேதி காலை 11-00 மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது. டெல்லியில் மட்டும் 1650 தபால் தந்தி (P&T) ஊழியர்களும்., 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள். தபால் தந்தி (P&T) ஊழியர்கள் 4000 பேர் உள்ளிட்ட 10000 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் 280000 ஊழியர்கள் கலந்து கொண்டனர். 140000 ஊழியர்கள் கைது ஆகினர். 8700 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் தபால் தந்தி (P&T) ஊழியர்கள் மட்டும் 3756 பேர். 44000 தற்காலிக ஊழியர்களை Termination செய்திட அறிவிப்பு கொடுக்கப்பட்டது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை.

பிகானேர்., பதான்கோட் மற்றும் பொங்கைகான் ஆகிய இடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 9 இரயில்வே ஊழியர்கள் பலியானார்கள். பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. கூட்டு நடவடிக்கைக்குழு அரசாங்கத்திடம் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடக்கோரியும்., அரசாங்கம் அசையாததால் விதிப்படி வேலை என்கின்ற போராட்டம் துவங்கியது. 

இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்றுபடுத்த உதவியது. தொழிலாளர் சக்தியை அரசாங்கமும் உணர துவங்கியது.

இந்த வேலை நிறுத்தத்தில் தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளையும்., தியாகங்களையும் நினைவு கூர்வது அவசியமாகும். ஏனெனில்., இன்றைய தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கும் பல்வேறு தொழிற்சங்க உரிமைகளுக்கும்., சலுகைகளுக்கும் இந்த தியாகங்கள் தான் விதையாக அமைந்து இருக்கிறது.

1968 செப்டம்பர் 19 போராட்டத்தில் பழிவாங்கப்பட்டவர்களின் மீதான நடவடிக்கைகளை தீர்ப்பதற்கு சில ஆண்டுகள் ஆனது. ஆனால்., உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அரசு எதை கொடுத்து ஈடுகட்ட முடியும். இப்படி., பல்வேறு பழிவாங்குதல்களை நெஞ்சுரத்துடன் எதிர் கொண்டு போராடிய தொழிலாளி வர்க்கத்தினை நாம் தலைதாழ்த்தி வணங்குகிறோம். உங்களின் தியாகம் வீண் போகாது. உங்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி இந்திய தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி வருகிறது. நீங்கள் காட்டிய பாதையில் சமரசமற்ற போரினை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். இதுவே செப்டம்பர் 19 தியாகிகள் தின பொன்விழா ஆண்டில் நாங்கள் ஏற்கும் சபதமாகும்.

1968 செப்டம்பர் 19 போராட்ட தியாகிகளுக்கு...!
NFTE- BSNL...! சேலம் மாவட்ட சங்கம்...!
தனது......! வீர வணக்கத்தை...!
உரித்தாக்குகிறது......!

No comments:

Post a Comment