Friday 17 August 2018

முன்னாள் பாரத பிரதமர் 
அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்


மாண்புமிகு. திரு. அடல் பிகாரி வாஜ்பாய்
பிறப்பு: 25-12-1924 - இறப்பு: 16-08-2018

முன்னாள் பாரத பிரதமர்., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்., பாஜக-வின் முதுபெரும் தலைவர் மாண்புமிகு உயர்திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 16-08-2018 அன்று தனது 93-வது வயதில் உடல் நலக்குறைவால் டெல்லி., AIIMS மருத்துவமனையில் காலமானார்.

திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள்., கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி-க்கு., 1924-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் பிறந்தார். விக்டோரியா கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார். கான்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மாணவராக இருக்கும் போதே., ஆர்.எஸ்.எஸ் இயக்க நிறுவனர் கேசவராவ் உடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இந்திய அரசியலில் நுழைந்தார்.

திரு. வாஜ்பாய் அவர்கள்., 3 முறை (13 நாட்கள்., 13 மாதங்கள் மற்றும் 5  ஆண்டுகள் என 3 முறை) பிரதமர் பொறுப்பு வகித்தவர். 12 முறை நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை உறுப்பினராக 10 முறை., மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை) பதவி வகித்தவர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி., இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு பறைசாற்றியவர். தங்க நாற்கர சாலை திட்டம் தந்தவர். 2015 -ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.

திரு. வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது., 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது., குஜராத் முதல்வராக இருந்த., திரு. நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார். அதர்மச் செயலுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு மோடிக்கு அறிவுரை கூறினார். அதே போல்., அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற முழக்கத்தோடு., அத்வாணி நடத்திய., ரத யாத்திரையில்., வாஜ்பாய்-க்கு உடன்பாடு இல்லை. இவ் வழியனுப்பும் விழாவில்., பேசிய வாஜ்பாய்., நீங்கள் போவது அயோத்திக்கு., கிஷ்கிந்தைக்கு அல்ல என்று தொண்டர்களை மறைமுகமாக எச்சரித்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்தவர்.

இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்த போதும்., திரு. வாஜ்பாய் அவர்கள்., தனது., ஆட்சிக்காலத்தில்., மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் செய்யவில்லை.

திரு. வாஜ்பாய் அவர்கள் ஆட்சிக்காலத்தில் தான்., நமது தொலைத் தொடர்பு துறை (DOT)., 01.10.2000-இல்., BSNL என்னும் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அப்போது., அரசு ஓய்வூதியம் காத்திட., அரசு ஓய்வூதியம் அரசாங்க நிதியில் தான் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி., நமது NFTE பேரியக்கம் FNTO மற்றும் BTEF ஆகிய சங்கங்களோடு இணைந்து., செப்டம்பர் 6., 7., 8 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. நமது போராட்டத்தின் விளைவாக., நமது நியாயங்களை உணர்ந்த., பாரத பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் நமக்கு அரசு பென்சனை அரசாங்க நிதியில் உறுதிப் படுத்தினார்.

முன்னாள் பாரத பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு., NFTE-BSNL சேலம் மாவட்ட சங்கம் சிரம் தாழ்த்தி., செங்கொடி தாழ்த்தி., தனது அஞ்சலியை செலுத்துவதோடு., அவரது பிரிவால் வாடும்., அவரது குடும்பத்தாருக்கும்., அவரது அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

ஆழ்ந்த இரங்கல்...! உடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment