Monday, 28 January 2019

2019 பிப்ரவரி 18 முதல் மூன்று நாட்கள்
தொடர் வேலை நிறுத்தம் - AUAB அறைகூவல்

Image result for strike

BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (AUAB) கூட்டம் 25-01-2019 அன்று காலை 11-00 மணிக்கு., டெல்லியில்., NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு., NFTE பொதுச் செயலரும் AUAB கூட்டமைப்பின் தலைவருமான தோழர். C.சந்தேஷ்வர் சிங் தலைமை தாங்கினார். AUAB ஒருங்கிணைப்பாளர் தோழர். P. அபிமன்யூ அனைவரையும் வரவேற்று., விவாதத்திற்கான ஆய்படு பொருட்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

இக் கூட்டத்தில்., NFTE சார்பாக., பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங் மற்றும் அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் அகமது., BSNLEU சார்பாக., பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ., SNEA சார்பாக., பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின் மற்றும் அகில இந்திய தலைவர் தோழர். A.A.கான்., AIBSNLEA சார்பாக., பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய் மற்றும் அகில இந்திய தலைவர் தோழர். A.சிவகுமார்., BSNL MS சார்பாக., பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார்., BSNL ATM சார்பாக., அகில இந்திய உதவி பொதுச் செயலர் தோழர். ரேவதி பிரசாத் மற்றும் BSNLOA சார்பாக., துணைப் பொதுச் செயலர் தோழர். H.P.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில்., AUAB முன்வைத்த கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில்., 3-வது ஊதிய மாற்றப் பிரச்சனையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை இக் கூட்டம் குறிப்பிட்டுக் காட்டியது. 4G அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சனையிலும் நிதி ஆயோக் மற்றும் செலவினத்துறை (Department of Expenditure) தடையை ஏற்படுத்தவே முற்படுகிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டது. BSNL ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்தோடு இணைக்கப்படாமல் தனியாக விவாதிக்கப்படும் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் உறுதியளித்த போதும்., ஓய்வூதிய மாற்ற விவகாரத்தில்., தொலைத் தொடர்பு துறை (DOT) தொடர்ந்து தடையை ஏற்படுத்தவே முற்படுகிறது.

BSNL சந்தித்து வரும் நெருக்கடியான நிதிச் சுமையோடு கடுமையாக போராடி வருவதையும் இக் கூட்டம் கவலையோடு பரிசீலித்தது. மேலும்., தொலைத்தொடர்பு துறை (DOT) ஏற்படுத்தியுள்ள தடையால் BSNL நிறுவனத்தால் வங்கிக் கடன் பெறமுடியவில்லை. இதனால்., மாநில நிர்வாகங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம்., வாடகை., ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட தேவைகளுக்கான நிதியை வழங்க முடியவில்லை. இதன் காரணமாக., BSNL நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கப் பணிகள் தாமதமாவதால் நிறுவனத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்., ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட GPF., EPF., வங்கித் தவணை., சொசைட்டி மற்றும் LIC ஆகியவை அந்தந்த நிறுவனங்கள் மற்றும் முகமைகளுக்கு செலுத்தப் படாததால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

BSNL-ன் புத்தாக்கத்திற்கான அனைத்து வழிகளையும் மூடுவதற்கான வேலைகளை தொலைத்தொடர்பு துறை (DOT) முன்னின்று செய்கிறது. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் அரசிடமிருந்து BSNL-க்கு உதவிகள் கிடைப்பதாக தெரியவில்லை. BSNL தன் வசம் உள்ள காலி நிலங்கள் மற்றும் கட்டிடங்களை வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டு நிதியை திரட்டிட "நில மேலாண்மை திட்டம்" ஒன்றை தயாரித்து தொலைத்தொடர்பு துறையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் BSNL தன் வசம் காலியாக உள்ள நிலங்கள் மற்றும் கட்டிடங்களை வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டு வருடத்திற்கு ரூபாய். 7000/- கோடி முதல் ரூபாய். 10,000/- கோடி வரை வருவாய் ஈட்ட முடியும். ஆனால்., தொலைத்தொடர்பு துறை (DOT) திட்டமிட்டு தடைகளை ஏற்படுத்தி அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

BSNL தன் வசம் உள்ள செல் கோபுரங்களின் பராமரிப்பு பணிகளை அதிகப் படியான விலைக்கு தனியார் வசம் ஒப்படைக்க முடிவு மேற்கொண்டு உள்ளது. இதன் காரணமாக., BSNL நிறுவனம் வருடா வருடம் அதிகப் படியான கட்டணத்தை செலுத்த வேண்டி வரும். எனவே தான்., இந்த திட்டத்தை ஆரம்பம் முதலே AUAB எதிர்த்து வந்தது. ஆனால்., BSNL நிர்வாகம் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது. தற்போது., BSNL ஊழியர்களே நாடு முழுவதும் பராமரிப்பு பணிகளை திறன்பட செய்து வரும் நிலையில்., கடுமையான நிதி நெருக்கடியான காலகட்டத்தில்., இத்தகைய கூடுதலான செலவு தேவையற்றது.

மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளை., AUAB விரிவாக விவாதித்த பின்னர் ஒத்திவைக்கப்பட்ட போராட்டத்தை மீண்டும் துவக்கி நடத்திட இதுவே சரியான தருணம் என்று ஒருமனதாக முடிவு எடுத்தது. மேலும்., இன்றைய சூழலில் BSNL-ன் புத்தாக்கத்திற்கான சில புதிய கோரிக்கைகளையும் இணைத்து போராடிட AUAB கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளது.

AUAB கூட்டமைப்பின் போராட்ட இயக்கங்கள் மற்றும் கோரிக்கைகள்:
போராட்ட இயக்கங்கள்: 
  • பல்வேறு கள நிலைமைகளை கணக்கில் கொண்டு., BSNL நிறுவனத்தில் உள்ள ஊழியர்களும்., அதிகாரிகளும் 18-02-2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட AUAB அறைகூவல் விடுகின்றது.
  • நமது போராட்ட கோரிக்கைகளின் மீது பொது மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 11-02-2019 முதல் 5 நாட்கள் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது.
  • அனைத்து மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் பிப்ரவரி 12 (அல்லது) பிப்ரவரி 13 தேதிகளில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது.
  • BSNL புத்தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட நமது கோரிக்கைகளை வலியுறுத்தி., அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து ஆதரவை திரட்டுவது.

நமது கோரிக்கைகள்:
  • 15% சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய., 3-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து.
  • BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின் படி., BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்.
  • 01-01-2017 முதல் BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து.
  • BSNL வழங்கும் ஓய்வூதியப் பங்களிப்பின் மீது அரசு விதிகளை அமுல்படுத்து.
  • 2-வது ஊதிய மாற்றக்குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க.
  • BSNL நிறுவனம் முன் வைத்துள்ள நில மேலாண்மை திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்திடு.
  • BSNL உருவாக்கத்தின் போது மத்திய அமைச்சரவை அளித்த உறுதி மொழிகளின் அடிப்படையில்., DOT தன் வசம் உள்ள சொத்துக்களை BSNL-க்கு மாற்றித் தர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக துவக்குக
  • BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின் படி BSNL நிறுவனத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNL-க்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்கு. BSNL நிறுவனம் வங்கிக்கடன் பெறுவதற்கு தேவையான உத்திரவாதக் கடிதத்தை (Letter of Comfort) உடனே வழங்கு.
  • BSNL செல் கோபுரங்களின் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடு.

தோழர்களே... தயார் படுவீர்...
போராடுவோம்... BSNL-ஐ காத்திடுவோம்...
போராட்டத்தை... வெற்றிகரமாக்குவோம்...

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment